இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த தலைவர் மகிந்த – பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனத்தின் அலுவலக வளாகத்தை நேற்று மீள திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிறுவனத்தின் 18ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்நிறுவனத்தின் அலுவலக வளாகம் புதியதாக மாற்றப்பட்டது.

இந்த நிறுவனம் அப்போதைய பிரதமரும் நெடுஞ்சாலை அமைச்சருமான மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அலுவலக வளாகம் அதன் ஸ்தாபகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் புனரமைக்கப்பட்டு மீள திறந்து வைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வீதி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய போது இந்த நிறுவனம் ஒரு கருத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவகத்தின் 18 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“எல்லா சமூகத்தினரும் அச்சமின்றி வாழக்கூடிய நாட்டை அவர் உருவாக்கினார். “முன்னாள் ஜனாதிபதி 30 வருட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பின்னர் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்து போரை முடித்தார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களை இணைக்கும் வீதி வலையமைப்பு மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. புத்தர் விஜயம் செய்த மஹியங்கனை நோக்கி பதினெட்டு ஹேர்பின் வளைவு வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அதன் மோசமான நிலை காரணமாக பெரும் ஆபத்தில் பயணித்தன. மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் பதினெட்டு ஹேர்பின் வளைவுகள் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வடக்கின் வசந்தம் மற்றும் வடகிழக்கு நவோதய வேலைத்திட்டங்களின் கீழ், மோதல்களால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்திய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட மகநெகும ஆலோசனை மற்றும் செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள் நிறுவனம் 18 வருடங்களை பூர்த்தி செய்யும் இந்த தருணத்தில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *