உயர்அதிகாரியை புகழ்ந்து கீதம் பாட மறுத்த 16 வயது மாணவியை அடித்துக் கொலைசெய்த பாதுகாப்பு படையினர்- ஈரானில் பெண்கள் மீது தொடரும் அடக்குமுறை !

ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் அங்கு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்குள்ள பெண்கள் ஈரான் அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது.

இந்தப் போராட்டங்களை அந்நாட்டு அரசு மிகவும் மோசமான முறையில் கையாண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அங்கு மற்றொரு மரணம் நிகழ்ந்து உள்ளது. இந்த முறை வெறும் 16 வயதான மாணவி அடித்தே கொலை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது. வடமேற்கு அர்டபில் நகரில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது மாணவிகள் சிலர் ஈரானின் உட்சபட்ச அதிகாரிகளைக் கொண்ட சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியை புகழ்ந்து பாட மறுத்து உள்ளனர்.

சோதனை என்ற பெயரில் உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் சுப்ரீம் லீடரை புகழ்ந்து கீதம் பாட வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும், அந்த மாணவிகள் பாட முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படையினர் பள்ளி மாணவிகள் என்று கூட பார்க்காமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

வகுப்பறையிலேயே பாதுகாப்புப் படையினர் இப்படி மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் மாணவிகள் காயமடைந்தனர். அவர்களில் 16 வயதான அஸ்ரா பனாஹி பாதுகாப்பு படையினர் தாக்கியதில் அப்படியே சரிந்தார். உயிரிழப்பு இதையடுத்து அவர் உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், மாணவி உயிரிழந்ததற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு இதை மறுத்து உள்ளது. அஸ்ரா பனாஹியின் உறவினரும் மாணவி இதய பிரச்சினை காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவித்து உள்ளனர்.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஹிஜாப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த செப். மாதம் 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதால் பொலிசார் அவரை கைது செய்தனர். தடுப்புக் காவலில் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் கோமா நிலைக்கும் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெண்கள் தலைமுடியை வெட்டியும் ஹிஜாபை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் மட்டுமே இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *