இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார். ஜோர்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி நேற்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.
அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.