இன்று மார்ச் 22 றியோ டி ஜெனீரோவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.
பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி, ஆறு, குளம், ஓடைகளும் இல்லை. இதன் காரணமhகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.
நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய் விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.
மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும் வாழ்விலும் இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.
ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல், வாய்ப்புக்களைப் பகிர்தல், (Transboundary waters; Sharing water, Sharing opportunities) என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி, சமாதானம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இத் தொனிப்பொருளின் நோக்கமாகும்.
நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி, யூப்பிரடிஸ், தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.
பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30சதவீதம் நிலக்கீழ் நீர். 3சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.
நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை, சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தகாமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும்.
வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு, றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. றியோ – டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை, விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.
உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.
இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயற்படுவோம்!
நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு, 1994ல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.
உலக வானிலை அவதான அமைப்பும் ; (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஸ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளுர்ப் பாவணைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்.
இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர, மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்றிட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச்சிக்கனம், நீர்த் தூய்மை, நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறைகாட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.
இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.
தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.
நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.
உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகிவருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.
எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெறஇ பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இன்றைய தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.
T Sothilingam
நீர்-எண்ணை வள நாடுகள்
கடந்த இரு நூற்றாண்டு காலமாக எண்ணை எரிபொருள் உலகில் ஏற்படுத்திய மாற்றங்களும் அதன் பிரதி விளைவுகளும் தற்போது உலகம் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. இதற்கான பரிகாரமான புதிய எரிபொருள் சாத்தியங்கள் பற்றி அவசியமாக ஆராயப்பட்டு வருகின்றது.
அதேபோல எதிர்வரும் காலங்களில் மனித வாழ்விற்கு தேவையான நீர்வளப் பிரச்சினை உலகில் எல்லா பிரதேசங்களிலும் ஒரு சிக்லான நிலைமைகளை ஏற்ப்படுத்தி அதற்கான புதிய வழிமுறைகளையும் ஆராய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த நீர்ப்பிரச்சினையானது இன்னும் முன்னேறிய நாடுகளின் பிரச்சினைகளில் ஒன்றாகாத வரைக்கும் வறிய நாடுகள் தம்மளவில் இதன் பாதிப்பை இதனால் வரும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அனுபவித்து தீரவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.
அதேவேளை தற்போது முன்னேறிய நாடுகள் இந்த நீர்ப்பிரச்சினையை ஒரு முக்கிய வியாபார நோக்குடன் வளர்த்து எடுக்கப் படுவதையும் அதன் மூலமாக மேலும் ஒரு மேலாதிக்க வழிமுறைகளை கண்டறிந்து கொண்டிருக்கிறது. அதறகு ஏற்ற ஆயுதங்களான சர்வதேச நீர்க் கம்பனிகளை மிக அவசர அவசரமாக மேற்கு நாடுகள் உருவாக்கிக் கொண்டிருப்பதன் மூலம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்னும் சில வருடங்களில் இந்த நீர்ப்பிரச்சினைக்கான ஆலோசனை மையங்கள் இயங்கத் தொடங்கி விடும் என்ற செய்தி திட்டமிட்ட வியாபார மைய நாட்டத்தின் முதற் படியேயாகும்.
உலகின் சனத்தொகையில் பெரும்பாலானோர்; 23 நகரங்களில் பூமியின் மத்திய பகுதிலேயே வாழ்கிறார்கள் இம்மக்கள் செறிந்து வாழும் பூமியின் பகுதிகளிலேயே வறட்சி ஏற்படுகிறது. இவ் வறட்சிக்கு கடலரிப்பும் கடல்நீர் உட்புகுதலும் இவற்றுடன் மக்கள் தொகை அதிகரிப்பினால் பாவிக்கப்படும் நீரின் அளவுத் தேவையுமே காரணங்களாகும். மனித குலம் ஆரம்பித்த காலந்தொட்டு பூமியின் மத்திய பகுதியை ஆக்கிரமித்த மக்கள்; தொடர்ச்சியாக இந்த பிரதேசத்தில் வாழ்வதும் இதற்கு முக்கிய காரணமாகியுள்ளது. தற்போதய காலங்களில் மனிதகுலம் பூமியின் வட– தென் துருவங்களை நாடுவதும் ஆய்வு செய்வதும் கூட இந்த நீரின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடுவதின் முனைப்பாகும். நீர்ப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடுவது என்பது பூமியின் வெப்பநிலை அதிகரிப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது என்பது வெள்ளிடை மலையே.
உலகின் 1.5 பில்லியன் சதுர நிலப்பரப்பானது சனத் தொகை அதிகரிப்பினாலும் அவர்களது வாழ்க்கைத் தரம் காரணமாகவும் பழுதாக்கப்பட்டுள்ளது. அதாவது நிலத்தினுடைய இயற்கைத்தன்மை ஆரம்ப காலங்களில் இருந்த நிலைகளிலிருந்து மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது. இம் மாற்றமானது தவிர்க்க முடியாததாகவும் புவியின் வளங்கள் அருகிப்போவற்கும் காரணமாக அமைந்து விட்டதெனினும் புதிய வளங்களை கண்டுபிடித்து புதிய சமூக பொருளாதார முறைகளை உருவாக்கி மனிதகுலம் தொடர்ந்து வாழும் அல்லது அந்த நிலைமைகளை நோக்கிய தனது போராட்டத்தை நகர்த்துவது தவிர்க்க முடியாதது. (வாழ்விற்கான போராட்டம் தவிர்க்க முடியாததாகி சிலவேளை அவசரமான செயலாகியும் விடக் கூடும்;)
தற்போதுள்ள சனத்தொகை அதிகரிப்பும் வாழ்க்கை முறையுமே வறல்நிலை உருவாக மிக முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது. வறட்சி நிலை மேலும் அதிகரிப்புக்கு உள்ளாகி இது மேலும் வறல்நிலை அளவைக் கூட்டி மனித குலத்தை ஒரு சிக்கலான புதிய பிரச்சினைகளுக்குள் உட்புகுத்தும்
என்பதே தற்போதய எதிர்பார்ப்பாகும் (சிலவேளை தற்செயலான – இயற்கையான திடீர் மாற்றங்களினால் இந்த எதிர்பார்ப்புக்களில் மாற்றங்கள் பூமியில் உருவாகக்கூடும்)
விவசாயத்திற்காக பாவிக்கப்படும் பாரிய நிலப் பரப்புக்கள் – தொடர்ச்சியாக ஒரே வகையான பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப் படுவதாலும, (சந்தைப்படுத்தலை நோக்கிய விவசாயம்) அந்த சந்தைப்படுத்தல் இச்சந்தைக்காகப் பயிரிடப்பட்ட விளைவுகளை மக்கள் மீது திணிப்பதாலும் இந்த தொடர் பயிடுதல் தேவையாகிவிட்டது.
இந்த பயிரிடல் முறையில் அதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களும்; – அதனுடன் சேர்ந்த நீரப்பாவனையும் இப்பாரிய விளை நிலப்பகுதியிலும் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்நிலப் பகுதியிலும் அவர்களின் வாழ்க்கை மறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.
இந்த தொடர்ச்சியான சந்தைக்கான பயிரிடல் மக்கள் வாழும் பூமியின் பிரதேசங்களை மேலும் வறல் நிலைக்கு உட்படுத்தி சமூகவியலில் பாரிய பல மாற்றங்களை உருவாக்கி மனிதர்களின் பயிரிடல் முறையில் மேலும் சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளதையும் அவதானிக்கின்றோம்.
உலகம் ஒரு கிராமம் என்ற சிந்தனையில் இயங்கும் மேற்குலகும,; சந்தைப் பொரளாதாரமும் பூமியின் வளங்களை தேவைக்கு அதிகமாக பாவித்தலால்;, வளங்கள் பாதுகாத்தலை செய்யத் தவறிவிட்டது. பூமியில் ஏற்படவுள்ள தொடர் வறட்சியும் மாற்றங்களும் மக்களின் வாழ்நிலையில் இடப் பெயர்வுகளை அதிகரித்தும், அதன் காரணமாக யுத்தங்களை உருவாக்கியும், அகதிகள் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியும, சமூக கொந்தளிப்புக்களை உருவாக்கும் என்பதுவும் தெளிவாகின்றது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை அண்டிய நாடுகளில்; அவர்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியிலும், நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பல சமூக அரசியல் முரண்பாடுகளையும் இயற்கை பிறல்வுகளையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இம் முரண்பாடுகள் மேலும் அதிகரித்து இதனால் கொந்தளிப்புகள் உருவாகலாம். இது இப் பிரதேசத்திலிருந்து கிடைக்கும் எரிபொருள் உற்பத்தியிலும்; -எரிபொருள் விநியோகத்திலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களை உருவாக்க வல்லது. இவை பூமியின் எரிபொருள் உற்பத்தியில் வீழ்ச்சியையும்; இந்த எரிபொருள் உற்பத்திக்கான யுத்தங்களையும்; உருவாக்கும் தன்மை உடையவைகளாக உள்ளன.
தற்போதய அவதானங்களின்படி நைல் நநிப் பிரதேசத்தின் வரட்சியும் அத்தோடு துருக்கிய இஸ்ரேலிய நீர்த்தட்டுப்பாடும் நீர்த்தேவைகளை பூர்த்திசெய்ய இதற்காக பயன்படுத்தப்படும் நீர்த் தொழில் நுட்பமுறைகளும் இந்தப் பிரதேசத்தின் வறல்நிலை வாழ்நிலைகளை மோசமடைய வைத்துள்ளதை அந்த பிரதேசத்திலுள்ள மக்கள் எதிர் கொள்ளும் அரசியல் சமூக பிரச்சினைகளிலிருந்து அறியமுடிகிறது.
சிரிய மக்கள் தமது ஜீவாதாரத்திற்கு தேலையான நீரின் பெரும் பகுதி துருக்கியில் உற்பபத்தியாகும் நதிகளிலேயே தங்கியிருக்கும் நிலையுள்ளதால் அத்தடன் சிரியாவின் மக்கள் தொகையிலும் உருவான பாரிய வளர்ச்சி நீர்ப்பாவனையில் அளவிலும இந்த துருக்கிய நதிகளின் பாவனையை அதிகப்படுத்தும் போது இந்த அரசகளுக்கிடையிலான உறவு நிலைகளில் சீர்த்தன்மையை எதிர்பார்கமுடியாத நிலைகள் உருவாக வாய்ப்புக்கள் உண்டு. இது போன்ற பல உதாரணங்களை உலகின் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கத் தொடங்கி அவை அரசியற் பிரச்pனைகளாகும் விளிம்புக்கு வந்துள்ளதும் கவனிக்கத் தக்கதே.
இந்த பூமியின் முக்கிய வளங்களில் ஒன்றான நீர்த் தேவை அதிகரிப்பினால் தண்ணீர் யுத்தங்களும் அதன் சார் பிரச்சினைகள மிக குறுகிய காலப்பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளிலும் பிற்காலப் பகுதிகளில் இது இதர பூமியின் பகுதிகளான மத்திய பிரதேச நாடுகளுக்கும் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. எமது அடுத்த நூற்றாண்டு இந்தப் பூமியின் நீருக்கான யுத்தங்களையும், மாற்று எரிபொருள் வளங்களுக்கான சந்தைப்படுத்தலையும் எதிர்பார்க முடியும்.
•ஓவ்வொரு 20 வருடங்களக்கும் உலகின் நீர் நுகர்வு இரட்டிப்பாகின்றது.
•மிக நிண்ட காலமாக வறல் நிலையடைந்த வரும் மத்திய கிழக்கு நாட்டு நிலப்பரப்புக்கள் தற்போது மிக விரைவாக மேலும் வறல் நிலையை அடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
•தற்போது பூமியில் 3 சதவிதமான நீரே புதிய நீராக இருப்பதாயும் மீதியுள்ள புதிய நீர் துருவப்பகுதியிலும் நிலத்துக்கடியிலும் இருப்பதாயும் ஆறுகள் குளங்களில் உடனடித்தேவைக்கு மிக குறைந்த நீரே கிடைக்கிறது.
•தற்போது உலகில் உள்ள 400 மில்லியன் மக்கள் நீர் மாசடைதலால் உருவாகியுள்ள நோய்களால் பாதிப்படைந்துள்ளனர் எனவும் இது இன்னும் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
•மத்திய கிழக்கு நாடுகளே முதலாவதாக நீர்த்தட்டுபாட்டினால் பாதிப்படையும் எனவும் அதிலும் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும நிலத்துககு அடியில் கிடைக்கும் 88 சதவீத நீர் பெற்றத்தரும் தொழிலை மத்திய கிழக்கு அல்லாத நாடுகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
•அரைவாசிக்கு மேலான சீன நகரங்கள் நிர்ப்பரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சனத் தொகையில் 21 சதவித மக்களைக் கொண்ட சீனா 7 சதவீதமான நீர்பகுதியையே தனது கட்டுப்பாட்டடில் வைத்துள்ளது.
•சிலமைல்கள் தூரம் நீளமாக இருக்கும் இமயமலைப்பிரதேசம் முக்கியமான ஆறுகளின் நீர்ப்பிறப்பிடமாக உள்ளதாலும் காஸ்மீர்ப் பிரதேசத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டை இழக்கவிரும்பாது.
•உலகின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேல் மக்கள் வசிக்கும் பிரதேசமாக கங்கை நதிப்பிரதேசம், மஞ்சள் ஆற்றுப்பிரதேசம், செங்யாங் ஆற்றுப்பிரதேசங்களே யாகும்.
இந்த நன்நீருக்கானதும், நீர்த்தேவைகளுக்குமான புதிய வழிமறைகளும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் அவசிய தேவையாகிவிட்டதை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. உலகத்தின் முக்கிய வளங்களான எண்ணை வளம் ஏற்ப்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்களைப்போன்று நீரும் நீர்ப்பற்றாக் குறையும் சமூக அரசியல் சிக்கல்களை ஏற்ப்படுத்தும்.
நீர்த்தேவையும் அது ஏற்ப்படுத்தும் புதிய பிரச்சினைகளும் தற்போது உலகில் உணரத் தொடங்கியுள்ளதை நாமும் உணர்ந்துள்ளேம்.