தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹெலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள்.
கொரோனா தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர். இந்த சன நெரிசலில் சிக்கி குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், 82 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில், சிக்கி இலங்கை பிரஜையொருவரும் உயிரிழந்துள்ளார்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.