குஜராத் பாலம் இடிந்து வீழ்ந்த விவகாரம் – 125 பேரை மட்டுமே தாங்கக் கூடிய பாலத்தில் 500 பேருக்கு அனுமதி !

குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

மாநில காவல் துறை இந்த விபத்து தொடர்பில் கூறியதாவது: “மோர்பியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. முன்னதாக பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மதிப்பு ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர்.

அதேநேரத்தில், பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், புகார் அளித்ததாகவும் எனினும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *