“ஐஸ் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டமூலத்தை இருவார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.” என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கொவிட் பெருந்தொற்று வைரஸ் பரவலை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூகத்தில் வேகமாக தீவிரமடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை, கிருலபன ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் வெளிப்படை தன்மையாகவே முன்னெடுக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் பதினைந்து வயதிற்குட்பட்ட 50 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதே. வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை இடைநிறுத்தி விட்டு கொழும்பு உட்பட நகர் பகுதிகளுக்கு தொழில்வாய்ப்பு தேடி வரும் இளைஞர் யுவதிகள் பாதாள மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் பிடிக்குள் சிக்குண்டு தமது எதிர்காலத்தை இல்லாதொழித்துக் கொள்கிறார்கள்.
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள். தலைநகரில் உள்ள பாடசாலைகள் மாத்திரமல்ல கிராமப்புற பாடசாலை மாணவர்களும் ஏதோவொரு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறது.
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றும் வகையில் இரண்டு வார காலத்திற்குள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை காட்டிலும் ஐஸ் போதைப்பொருளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற அவதானம் செலுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தீவிரமடைந்தால் அது பாரதூரமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பாவனைக்காகவே வழிபறி கொள்ளை,கொலை,கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.வழிப்பறி கொள்ளை தற்போது சாதாரணமாகி விட்டது.
போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக மத தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனாவில் அபின் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது,அதை ஒரு எடுத்துக்காட்டாக கருதி நாமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.