யாழ்ப்பாணம் புங்கங்குளம் ரயில் கடவையில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் குறித்த இளைஞன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2.15மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் அதே ரயிலில் மீள திரும்பி யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.