பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.
தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.
ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.
சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.
நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.
ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.
300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.