பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

பாடசாலைகளில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மாணவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு,  தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்பான சட்டங்கள் தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில், சிறுவர்கள் தொடர்பான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம்  விசேட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.

குறிப்பாக, 1995 ஆண்டின் 22 ஆம் இலக்க 308 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாக உப சரத்துகளை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.  மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டவுடன், அதனை பொதுமக்கள், சிவில் அமைப்புகள், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு கையளித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு, சட்ட வரைஞரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் மாணவர்கள் தாக்கப்படுவதுடன், சில மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நிலைமைகள் காணப்படுவதாக  உதயகுமார அமரசிங்க கூறினார்.

அதேபோன்று, மாணவர் தலைவர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான  நீண்டகால தீர்வாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக பாடசாலை சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *