“இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை.
இனவாத கருத்துக்கள் பொருளாதார பின்னடைவிற்கு பிரதான காரணியாக உள்ளது. இனவாதத்தை முதலீடாக கொண்டு வரும் அரசியல்வாதிகளை சிங்கள மக்கள் ஆதரித்தார்கள். 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட போது சிங்கள சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தனிச் சிங்கள சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளும், இன அழிப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இனவாதத்தை முதலீடாக கொண்டுள்ள அரசியல் தரப்பினருக்கு எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இளம் தலைமுறையினர் இனவாதம் இல்லாமல் சிறந்த முறையில் சிந்திக்கின்றமை வரவேற்கத்தக்கது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். மகாவலி அபிவிருத்தி சபை ஊடான காணி அபகரிப்பு, இராணுவ முகாம் விஸ்தரிப்பிற்கான காணி சுவீகரிப்பு உள்ளிட்ட சவால்களை தொடர்ந்து எதிர்க் கொண்டுள்ளோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 671 ஹேக்கர் நிலப்பரப்பில் கடற்படை கோட்டபய கடற்படை முகாம் ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மக்களின் வீருப்பத்துடன் இந்த கடற்படை முகாம் அமைக்கப்படுவதாக கடற்படை குறிப்பிடுகிறது.தமது சொந்த காணிகளை கடற்படைக்கு விட்டுக்கொடுக்க விருப்பமில்லாத மக்கள் உள்ளார்கள். ஆகவே விருப்பம் தெரிவிக்காதவர்களின் காணிகளை அரசாங்கம் முறையாக விடுவிக்க வேண்டும்.
மறுபுறம் தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்களுக்காக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறது. முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்களை அழித்து அங்கு பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பௌத்த மதத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இந்து ஆலயங்களையும், இந்து மத சின்னங்களையும் அழித்து பௌத்த விகாரைகளை ஸ்தாபிக்க முயற்சிக்கும் போது தமிழ் மக்கள் மனங்களில் விரக்தி நிலை தோற்றம் பெறும்.
2009 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் கூட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறுவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. நான்கு வருட காலத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை தற்போது அமுல்படுத்தியுள்ளது.
யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் 4200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை பகைத்துக் கெர்ணடு எந்த அரசாங்கமும் ஆட்சியில் இருக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் காணப்படுவதால் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது, மத்திய வங்கியும் நாணய அச்சக கூட்டுத்தபானத்தை போன்று நாணயம் அச்சிடுகிறது. இந்த நிலை மாற்றம் பெற்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்ட முடியும் என்றார்.