இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத பலரும் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி பயணப்பட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் மத்திய தர வர்க்கத்தினர் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அதிகம் பயணப்படுவோராக காணப்படும் நிலையில் இந்த இக்கட்டான நிலையை நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல மோசடியாளர்கள் ஏஜென்சி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடுகின்றனர். அண்மையில் வியட்னாம் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட தமிழர்களின் விவகாரம், ஓமானில் வேலைக்கு என அழைத்துச்செல்லப்பட்டு விபச்சாரத்துக்கு பெண்களை அனுப்ப முயற்சித்த விவகாரம் போன்றவற்றின் பின்னணியில் இந்த மோசடியாளர்களே உள்ளனர். இது தவிர ருமேனியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக போலிப் பிரச்சாரம் செய்த இரு நபர்கள் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலை எல்லா பகுதிகளிலும் தொடர்கிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக இன்றையதினம் (22) மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பொறப்பட்ட 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.