நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது (நவ 21.2022) “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மூன்று கோடியினைப் பெற்றுக்கொண்டு கனடாவிற்கு ஆட்களை அனுப்புகின்றார்.”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்; “கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.” எனவும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனின் காணி அபகரிப்பு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமிக்குமாறும் சபைக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாரந்தன் நேற்று (நவ. 21)நான் சபையில் இல்லாதபோது எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை முன்வைத்துள்ளார்.
அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். காணி அபகரிப்பு தொடர்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.
காணி அபகரிப்பு தொடர்பில் என்னிடம் உள்ள ஆவணங்களை தருகிறேன்,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ள ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
கனடாவிற்கு ஆட்களை கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆட்கடத்தல் தொடர்பில் சந்திரகாந்தனிடம் கேட்க வேண்டும்.
அவுஸ்ரேலியாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஏபிசி என்ற செய்தி நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் சந்திரகாந்தனின் சகோதரர் என குறிப்பிடப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் என்பவர் ஆட்கடத்தலில் ஈடுப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவை நியமியுங்கள்.
மோசடி தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார். ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.
……….
உண்மையிலேயே இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த தமிழ் மக்கள் தொடர்பில் கிஞ்சித்தும் யோசிப்பதாக தெரியவில்லை. வடக்கில் ஈ.பி.டி.பி கட்சியினர் குறிப்பாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்தேசியக்கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பினரை மலினப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டமைப்பினர் பதில் கூறிக்கொண்டிருக்கின்றனர். இது தவிர கிழக்கில் பிள்ளையான் , வியாழேந்திரன் ஆகியோர் ஒரு குழுவில் நிற்க அவர்களை இரா.சாணக்கியன், கலையரசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் தாக்கியும் – அதற்கு பதிலாக பிள்ளையான், வியாழேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பினரையும் தாக்கி பேசி வருவது வழமையாகிவிட்டதே தவிர மக்கள் பிரச்சினைகளை இவர்கள் பேசுவதாக தெரியவில்லை.
நேற்றைய அமர்வில் மீனவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரியுங்கள் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி நேற்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இது தவிர கட்சி அரசியல் தொடர்பில் பல வாதங்களும் – முரண்களும் காணப்பட்டாலும் கூட மலையக தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான ஆரோக்கியமான பல நடவடிக்கைகளை மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக பல தென்னிலங்கை, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை நாடாளுமன்றம் தெரிவுசெய்த மக்களுக்காக ஏதாவது செய்துவிட வேண்டும் என செயற்பட்டுக்கொண்டிருக்க வடக்கு – கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களுடைய சொந்த – சுய விருப்பு – வெறுப்பு அரசியலை செய்யும் சண்டைக்களமாக நாடாளுமன்றத்தை பாவித்துக்கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய – வலியுறுத்த வேண்டிய பல பிரச்சனைகள் வடக்கு- கிழக்கில் மலிந்து போய் காணப்பட நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழாயடி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் சுதாகரித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. புலி ஆதரவு அரசியல் பேசுவவோரையும் – தேர்தல் கால வீர வசனங்களை பேசுவதையும் கைவிட்டு உண்மையாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்ப முன்வராத வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.