“நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் செய்த தியாகங்களை இன்னொரு இனத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது.” – சரத் வீரசேகர

” நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.” என நாடளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொட்பில் பாராளுமன்றத்தில் நேற்று அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அமுல்படுத்தியது. இலங்கையர்கள் அதனை கோரவில்லை.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் தான் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, அதிகாரத்தை பிரயோகித்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார் . ஆகவே 13 ஆவது திருத்தத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இடையில் தொடர்பில்லை.

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம். ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை. சமஷ்டியாட்சி நாடுகளில் மாத்திரம் தான் அதிகார பகிர்வு சாத்தியமாகும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளது. சோழர், பாண்டியன் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். ஆகவே அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் இந்த நோக்கத்துடன் செயற்பட்டார்.

ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஒவ்வொருவரின் தேவைக்காக மலினப்படுத்த முடியாது. மாகாண சபைக்கு முழுமையாக எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்.

மாகாண சபை என்பது வெள்ளை யானை. ஒவ்வொரு இனத்தவரின் தேவைக்காக நாட்டை பிளவுப்படுத்த முடியாது, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்” என்றார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *