“கஞ்சா பயிர் செய்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும்.” – முன்னாள் சுகாதார்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன

“கஞ்சா பயிர் செய்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும்.” முன்னாள் சுகாதார்துறை அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் இகலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் கஞ்சா பயிர்செய்கையை சட்டபூர்வமாக்க வரவு-செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கஞ்சா நேரடியாக மருத்துவ சிகிச்கைக்காக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆயர்வேத மருத்துவ தேவைக்கு பூச்சியமளவில் தான் பயன்படுத்தப்படுகிறது.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் முயற்சியின் பின்னணியில் உலகளாவிய மட்டத்தில் முன்னிலை வகிக்கும் பிரதான நிலை புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. நான் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது இந்த நிறுவனங்கள் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் பேச்சுவார்தையில் ஈடுப்பட்டார்கள்,ஆனால் அவர்களின் நோக்கத்திற்கு இடமளிக்கவில்லை.

மருத்துவ பயன்பாட்டுக்கான கஞசா பாவனை என்று குறிப்பிடப்படுவதற்கு பின்னணியில் இந்த முன்னிலை நிறுவனங்கள் தான் உள்ளன. 1895 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சிகரெட் உற்பத்தி ஒப்பீட்டளவில் தான் முன்னேற்றமடைந்துள்ளது. சிகரெட் பாவனைக்கு மாற்றீடு ஒன்றை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. அதற்காகவே கஞ்சா பாவனையை தெரிவு செய்துள்ளார்கள்.

இந்த நிறுவனங்களின் தேவைக்கேற்ப கஞ்சாவை பயிரிட நேரிடும். முதல் மற்றும் இரண்டாம் தொகையை மாத்திரம் இந்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் மிகுதியை பொறுப்பேற்காத நிலையில் நாட்டில் சந்திக்கு சந்தி கஞ்சா விற்பனை நிலையங்கள் தோற்றம் பெறும் இக்கட்டான நிலை ஏற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் லெபனான் 2019 ஆம் ஆண்டு கஞ்சா பயிர்செய்கையை சட்டபூர்வமாக்கியது. லெபனான் பொருளாதாரத்தில் தற்போது முன்னேற்றமடைந்துள்ளதா..? என்பது பற்றி ஆராய வேண்டும். தாய்லாந்து நாட்டில் கஞ்சா பயிர்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால் தாய்லாந்து நாட்டின் சுகாதார மருத்துவ சங்கம் இந்த அனுமதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை அறியவில்லையா?

ஆயர்வேத மருத்துவ ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பிடுவது சாத்தியமற்றது.  சட்ட அங்கிகாரம் வழங்காத நிலையில் இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். ஆகவே ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை மீட்டெடுப்பதை விடுத்து புகையிலை நிறுவனங்களின் நோக்கிற்கு அகப்பட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *