பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறனர். ஆனால் அவர்களின் கருத்துப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது. மேலும் சில அறிவியல் ஆய்வுகளின் பின்னர் இராணுவத்தை சரியான மட்டத்தில் முன்னெடுப்பது தான் நாட்டிற்கு ஏற்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த, செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு மூலோபாய திட்டங்களின் கீழ், நாட்டுக்கு ஏற்ற வகையில் இராணுவத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முப்படைகளையும் தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்கு இது வசதியாக அமையும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் முப்படைகளையும் தயார்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில் இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது இராணுவம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது, அதன்படி, நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய இராணுவத்தினருக்கு பொது மன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது முதன்முறையாக வழங்கப்படும் பொது மன்னிப்பு காலமாக இல்லாவிடினும், வெளிநாடு சென்றுள்ள இராணுவப்படை உறுப்பினர்களுக்கும் இப்பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அல்லது அவர்களுக்கு வர முடியாவிட்டால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களை கையளித்து பொதுமன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியுமான வாய்ப்பை இராணுவம் முதன்முறையாக வழங்கியுள்ளது.
இதன்படி, இம்மாதம் 29ஆம் திகதி வரையில் 14,127 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆயுதப்படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் சுதந்திரமாக சேவையை விட்டுச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் நலனுக்காக போர் வீரர்களுக்கான நலன்புரி பிரிவை நிறுவி அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நலன்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.