ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அயல் நாடுகளை அச்சுறுத்தும் போக்கை கையாண்டு வருகிறது.
அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும். அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் வன்முறை போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது. அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த இராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.