ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை மாற்ற முன்வந்துள்ள அக்கட்சி செயற் குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்டுவதோடு இது போன்ற துணிவு சமூகப்பற்றற்ற ரவூப் ஹக்கீமின் தலைமையையும் மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கல்முனை கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற உலமாக்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐ. தே. க. என்ற வண்டியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன் என அன்று தலைவர் அஷ்ரப் கூறியதை மு. காவின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் உதாசீனம் செய்த போதும் இன்று அக்கருத்தை ஐ. தே. கவின் செயற் குழு உறுப்பினர்கள் ஏற்று செயற்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
இது போன்ற துணிவு மு. காவினருக்கு வருமா என்பது சந்தேகமே. என்றாலும் அத்தகைய துணிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சமூகப்பற்று இருக்கின்றது என்பது தெளிவாகும். அத்தகைய துணிவை ஏற்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மு. காவின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்க முன்வரவேண்டும்.
எவ்வாறு ஐ. தே. க. ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்களிப்பதை தவிர்த்து அதன் செயற் குழுவினருக்கு இத்தகைய தைரியத்தை அளித்தார்களோ அதே போல் முஸ்லிம் சமூகமும் மு. காவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் அக்கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் தைரியத்தை வரவழைக்க முடியும்.
இல்லையேல் ரவூப் ஹக்கீமும் அவரை சார்ந்துள்ளோரும் இந்த சமூகத்தை அதளபாதாளத்தில் தான் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.