கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வியாபார நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளின் போது, சட்ட விரோத விதைப்பை வர்த்தகம் குறித்த தகவலொன்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வறிய குடும்பங்களை இலக்குவைத்த சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில், பொரளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற 5 முறைப்பாடுகள் தொடர்பில், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம் முதல் தகவலறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சி.சி.டி. பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகளில் ஒரு அங்கமாக புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யும் போது, சட்ட விரோத விதைப்பை வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாவுக்கு ஒரு விதைப்பை விலை பேசப்பட்டுள்ளதாக அந்த வாக்கு மூலம் ஊடாக வெளிப்படுத்தப்பட்டதாக கூறும் பொலிசார், அதற்கான ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கும் அந்த இளைஞன் உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இதுவரை அடையாளம் காணப்படாத நபர் ஒருவரே விதைப்பை தொடர்பில் விலை பேசியுள்ளதுடன், அவர் சிறுநீரக வர்த்தகத்திலும் உறுதியளித்த பணத் தொகையை வழங்காமல் இருந்தவர் என தான் அறிந்துகொண்டதால், விதைப் பையை குறித்த பணத்தொகையை பெற்றுக்கொண்டு வழங்க தான் மறுத்ததாக குறித்த இளைஞன் சி.சி.டி. அதிகாரிகளிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கொழும்பு 13 , புளூமெண்டல் வீதி, சிறிசந்த செவன வீடமைப்பில் வதியும் நபர், பொரளை தனியார் வைத்தியசாலை சிறுநீரக வர்த்தக நடவடிக்கைகளுக்கு தரகராக செயற்பட்ட நபர் 5 பேருடன் சென்று பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கொழும்பு – கொச்சிக்கடையை சேர்ந்த வேல்டிங் தொழிலாளர் ஒருவர், கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தையைச் சேர்ந்த வீதித் துப்புரவு தொழிலாளி, புளூமெண்டல் – சிரி சந்த செவன குடியிருப்பில் வசிக்கும் வேல்டிங் தொழிலாளி, கொழும்பு 13 மீரானியா வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, மற்றும் கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தை , மெத் சிறி செவன வீடமைப்பில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தையின் தாயொருவர் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை செய்திருந்தனர்.
குறித்த ஐவரிடமும் மோசடியான முறையில் சிறுநீரகங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், சட்டத்தை விவரித்து அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையை வழங்காமல் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்த வர்த்தக வலையமைப்பில், பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பிலும் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை கோரி உரியவர்கள் செல்லுமிடத்து, குறித்த பொலிஸ் அதிகாரி அவர்களை கண்டித்து சிறு தொகை பணத்துடன் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை முனெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையிலேயே பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் சி.சி.டியினரால் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றுக்கும் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.