தடுப்பு மருந்தில் எவ்வித பிழையுமில்லை. ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுகாதார அமைச்சு மருத்துவர்கள் குழுவின் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை, இரத்த பரிசோதனை அறிக்கை, உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே இறுதி முடிவொன்றுக்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று குறித்த சிறுமியின் தாய் எழுதியிருந்த கடிதக் குறிப்பில் சம்பந்த ப்பட்ட டாக்டர் கவனமெடுத்தல் அவசிய மென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி மரணமடைந்தமை தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பில் பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் விசாரணை அறிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் பார்வைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இத் தடுப்பு மருந்து ஏற்றல் திட்டத்தை ஆரம்பிப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இம் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளித்த போது :-
பசுப்பால் சம்பந்தப்பட்ட ஆகாரங்கள் தமது மகளின் உடலுக்கு ஒவ்வாததெனவும் ருபெல்லா தடுப்பூசி வழங்குபவர்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் மரணமடைந்த சிறுமியின் தாயார் கடிதக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். இதனை தடுப்பூசி வழங்கிய டாக்டர் கவனத்திலெடுத்திருக்கலாம் என்பதே பலரதும் கருத்தாகிறது.
ருபெல்லா தடுப்பு மருந்து 1996ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமர்சனங்களை மேற் கொள்வோர் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் குற்றம் ஒப்புவிக்கப்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்றைய இச்செய்தியாளர் மாநாட்டிற்கு மேற்படி தடுப்பு மருந்துடன் தொடர்புபடும் சுகாதார நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
murugan
“யாழ்.குடாநாட்டில் ரூபெல்லா தடுப்பூசி பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வட பிராத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கும் பக்ஸ் மூலம் அவசர பணிப்புரை ஒன்றினை சுகாதார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரூபெல்லா தடுப்பூசி ஏற்றல் விஷமானதால் மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை மாணவிகள் 28 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு மாணவி பலியாகியிருந்தார். இந்த நிலையிலேயே அந்த தொகுதியிலுள்ள மருந்தே யாழ்ப்பாணத்தில் ரூபெல்லா தடுப்பூசி ஏற்றலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதை உடன் நிறுத்துமாறு சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணத்தில் ரூபெல்லா தடுப்பூசிக்கு அண்மைக் காலமாக தட்டுப்பாடு நிலவிவந்த போதிலும் போக்குவரத்து காலதாமதம் காரணமாக ரூபெல்லா ஏற்றம் உடனடியாக இடம்பெற்றிருக்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.”