மே . 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான  அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் என விமல் வீரவங்ச கோரிக்கை !

“நாட்டில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான  அறிக்கையின் உண்மை தன்மையை தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு  மக்களுக்கு உண்டு.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.05) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்க  அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியிடம் குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாட்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக இந்த குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  அந்த அறிக்கையின் உண்மை தன்மையை அறிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. குழுவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

தற்போதைய ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியவில்லை. இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய விமல் வீரவன்ச, குழுவினர் இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

ஆகவே அறிக்கையை தொடர்ந்து மூடி மறைக்காமல் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *