பாடசாலை அதிபர்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தால், அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
அதிபர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், எட்டப்பட்டுள்ள தீர்வினை அரசசேவை ஆணைக்குழு மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், அதிபர்களுக்குச் சம்பந்தமில்லாத ஆசிரிய சங்கமொன்று, பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
குறித்த சங்கத்திற்குப் பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும், எனினும், அந்த அழைப்பை ஏற்காது தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறெனினும், அவர்களின் பதவி விலகல் கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் தயாராகவே உள்ளாரென்று அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, திட்டமிட்டபடி அதிபர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரிய தொழில் சார்ந்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்தார்.
சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் இந்தப் பிரச்சினையை கல்வி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த கல்வி அமைச்சர், ஏற்கனவே, தீர்க்கப்பட்டுவிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சங்கம் பிரபல்யத்தைத் தேட முனைவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு அதிபர்களைக் கல்வி அமைச்சுக்கு வரவழைத்துள்ள இந்தத் தொழிற்சங்கம், பதவி விலகல் கடிதங்களைத் தனியே கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.