கூட்டமைப்பிலிருந்து உடைந்து தனித்தனியே போட்டியிடுவதற்கு தொழில்நுட்ப ரீதியில் ஆராய்கிறோம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

“தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை விடுவிப்பது இல்லை என்ற தெளிவான முடிவில் ஜளாதிபதி உள்ளார்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று  (11) வவுனியா, குடியிருப்பு  கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது.

அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. தற்போது ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் அரசியல் அமைப்பு விடயங்கள்  கட்சியின் உடைய நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகளோடு பேசி மூன்று விடயங்களை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம். அரசாங்கத்திடம் தற்போது அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக தற்போது அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மூன்றவதாக வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறையில் சமஸ்டி கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற 3 விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்வதென தீர்மானித்து அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம்.

சில கால எல்லைகளுக்குள் இவை நடந்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு சொல்லவுள்ளோம். அவற்றை ஏனைய கட்சிகளுடனும் பகிர்ந்து ஒற்றுமையான நிலைப்பாட்டை இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தற்போது இடம்பெறும் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம். இந்த எல்லை மீள் நிர்ணயம் சில இடங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை உடனடியாக ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துவதாகவும், அத்தோடு 60 இற்கு 40 என்ற வீதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாக உள்ள சட்டம் 70 இற்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும் என்பதனை பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெறும். அங்கு எமது கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான திகதியை தீர்மானிப்போம்.

தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் இவ் விடயம் ஆராயப்பட்டுள்ளது. வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில் சென்ற முறை எமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து தனித்தனியாக போட்டியிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூடுதலான உறுப்பினர்களை சேர்க்குமா இல்லையா என்கின்ற தொழில்நுட்ப ஆராட்சியில் ஈடுபட்டுள்ளோம். அது தொடர்பில் நாம் சிந்திப்போம்.

ஜனாதிபதியுடனும் நீதி அமைச்சருடனும்  நான் பேசிய போது அரசியல் கைதிகள் 32 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டது.  எனினும் ஜனாதிபதி அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் அவர்கள் குறித்த கொள்கையில் செயற்படுகின்றனர். அதாவது தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை விடுவிப்பது இல்லை என முடிவு அவர்களிடம் காணப்பட்டது. எனினும் அவர்கள் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் அதனை மறுபரிசீலனை செய்வது என தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலவித சிக்கல்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. நானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தரை சந்தித்து கலந்துரையாடினோம். அவர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாக கூறியிருக்கின்றார். எனவே அவ் விடயங்கள் கையாளப்படும் என நம்புகின்றோம் எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *