13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.
நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும் எனவும் பஷில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்ச,
‘நாட்டில் சட்டம், ஒழுங்கு தற்போது உள்ளவாறு உறுதிப்படுத்தப்பட வேண்டும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேசினேன்.
ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்தன. மொட்டு கட்சியை பலவீனப்படுத்துவதற்கு அவர் துணை நிற்கமாட்டார்.’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.