“பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதால் இணைந்து பணியாற்ற முன்வாருங்கள்.”- ஜனாதிபதி ரணில் !

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் பல்துறை கூட்டுப் பொறிமுறையின் கீழ் பதுளை மாவட்டத்துக்கான வேலைத்திட்டத்தில் நேற்று (15) இணைந்துகொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதுளை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உரம் மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்திலும், எந்த நாடும் எமக்கு கடன் வழங்க முன்வந்திராத நிலையிலுமே நாம் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கினோம்.

2023 ஆம் ஆண்டு உணவுப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முகங்கொடுப்பதற்காகவே உணவுப் பாதுகாப்பு திட்டத்தை நாம் தொடங்கினோம். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் பற்றி மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன். அப்போது உங்களுக்கு புதிய தரவுகள் கிடைக்கலாம். அதன்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முறையான முறையில் மேற்கொள்வோம். இந்த திட்டம் 2023க்கு பின்னரும் முடிவடையாது. அதை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

பிரதேச சபைகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். எனினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை நாம் வழங்கி வருகின்றோம். இம்முறை பெரும்போகம் வெற்றி பெற்றுள்ள அதேநேரம் எதிர்காலத்தில் எமக்கு மேலதிக அரிசி கையிருப்பும் கிடைக்கும்.

அங்கே போதிய களஞ்சிய வசதிகள் இல்லாமைக் குறித்தும் கண்டறிந்துள்ளோம். அப்பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கிடையே நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கவும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

பதுளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தையும் நாம் தயாரித்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *