“சிங்கள மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி ரணிலுடன் பேசத்தயாராகியுள்ளோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

திருக்கோவிலில்  நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் .

தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம்

இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது.

அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி தெளிவாக எடுத்துரைப்போம்.

அதாவது  வடக்கு கிழக்கிலுள்ள   தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதி உச்ச அதிகார பகிர்வு தரப்பட வேண்டும்.

இதுவே எமது தெளிவான தீர்க்கமாக முடிவாக இருக்கின்றது. இதனை நாங்கள் ஜாதிபதியிடம் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றோம். ரணிலை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதெல்லாம் இப்பொழுது பிரச்சனை அல்ல.

எமது தீர்வை அங்கு சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது பிரச்சனை. கடும் சிங்கள தேசியவாதம் உருவாகின்ற பௌத்த சம்மேளனம் போன்ற அரங்குகளில் நாங்கள் சமஷ்டி பற்றி பேசி இருக்கின்றோம். அவர்கள் அதனை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள் .

இந்த நாட்டிலே தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம்  இடம் பெற்றது. தேர்தல் இன்றி எந்த ஆட்சி மாற்றமும் இதுவரை இடம் பெறவில்லை . ஆனால் அண்மையில் காலிமுகத்திடலில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆம் அசைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மேல் இருந்த கோட்டா முதல் மொட்டு அரசாங்கம் வரை கவிழ்த்து விட்டது.

1960 களில் இராணுவ புரட்சி இடம்பெற்றது. அது கைவிடவில்லை. 1971களில் ஜே.வி.பி. புரட்சி ஏற்பட்டது. அதுவும் கைகூடவில்லை.1988 களில் ஆயுதம் தூக்கி போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை. இடையிலே எமது இளைஞர்கள் பெருநிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் சில தசாப்தங்கள் வைத்திருந்து போராடினார்கள். அதுவும் கைகூட வில்லை .

ஆனால் இந்த வருட நடுப்பகுதியில் கொழும்பிலே இடம்பெற்ற போராட்டம் என்பது பல வெற்றிகளை தந்து இருக்கின்றது .

2009 நவம்பரில் 69 லட்சம் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார் .அதன் பின்பு அந்த பொதுத் தேர்தலிலே 68 லட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை அரசை அமைத்த அந்த அரசும் கவிழ்ந்தது .ஆகவே அந்தப் போராட்டத்தை நாங்கள் சாதாரணமாக நோக்கக்கூடாது .

இது ஒரு பாடம். இலங்கைக்கு தேர்தல் மூலமாக இல்லாமல் ஒரு போராட்டம் மூலமாக ஆட்சி அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.

நான் பாராளுமன்றத்தில் இப்பொழுது  சமஸ்டி பற்றி பேசுகின்றேன். யாரும் வாய்திறப்பதில்லை. அன்று சமஸ்டி என்றால் கூக்குரலிடுவார்கள்.

ஆனால் இன்று அதனை கூறுகின்ற பொழுது அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ ஒரு மௌனத்தோடு கவனிக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் அந்த மாற்றம் தென்படுகின்றது.

எனவே நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையை நாங்கள் எதிர்கொள்வோம். என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *