165 அதிபர்களால் மட்டுமே பதவி விலகல் கடிதங்கள் கையளிப்பு

மூவாயிரம் அதிபர்கள் தமது விலகல் கடிதத்தை வழங்குவதாக கூறியபோதும் 165 பேர் மட்டும் நேற்று (25) தமது விலகல் கடிதங்களை கையளித்ததாக கல்வி அமைச்சு நேற்று (25) தெரிவித்தது. கையளிக்கப்பட்ட விலகல் கடிதங்கள் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு தயாரிக் கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து மூவாயிரம் அதிபர்கள் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களை அமைச்சிற்கு வழங்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் தொழில்சார்ந்தோர் தொழிற் சங்கம் அறிவித்திருந்தது. அதிபர்கள் விலகல் கடிதங்களை கையளித்தால் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் அறிவித்திருந்தார்.

இதன்படி, விலகல் கடிதங்களை கையேற்பதற்கென மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு கூறியது. ஆனால், பதவி விலகுவதாகக் கூறும் படிவம் ஒன்று கல்வி அமைச்சில் உள்ள சில நபர்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு அவை ஒழுங்கான முறையில் நிரப்பப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்படுகிறது. சில படிவங்களில் போலியான ஊர், பெயர்கள் இடப்பட்டிருந்தன என கல்வி அமைச்சு தெரிவித்தது.

ஒழுங்கான ஒரு விலகல் கடிதம் கூட கையளிக்கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு கூறியது. இவற்றை உண்மையில் அதிபர்கள் தான் கையளித்தனரா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதோடு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைப்பது தாமதமானதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக் குழுவின் அனுமதி தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, விலகல் கடிதம் கையளிக்க வரும் சகலருக்கும் அமைச்சு வளாகத்திற்குள் சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு அங்கு வந்திருந்த ஐந்து அதிபர்களுடன் அமைச்சின் மேலதிக செயலாளர் பேச்சு நடத்தியுள்ளார். அதிபர்களின் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அவர் இங்கு விளக்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *