அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் போது இழுபறியில் ஈடுபடாமல் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தம்மிடம் முன்வைக்கப்படும் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளை அரச அதிகாரிகளால் தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்ட சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ கொழும்பில் இருந்து வரவேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் சிறந்த பொதுச் சேவையை சிறந்த ஒருங்கிணைப்புடன் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் நுவரெலியாவில் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து கூட்டறிக்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அந்த அறிக்கை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், உலக முடிவுப் பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பட்டிப்பளைக்கும் பொரலந்தவிற்கும் இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.