தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2001 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமிழர்களினுடைய பிரச்சனைக்கான தீர்வை வழங்க முன் வந்த போது அதை தடுத்தவர் தான் தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க. ஆனால் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவதில் ஆர்வமாக உள்ளார்.
பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய பேச்சுக்களின் போது எதிர்க்கின்ற நிலையே காணப்பட்டாலும் கூட சஜித் பிரேமதாச இதிலிருந்து வேறுபடுகிறார்.
இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக சஜித் பிரேமதாச ஒத்துக்கொண்டால் அவருக்கான முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.