ஜெயன் தேவா: முரண்களோடு வாழ்ந்த ஒரு மனித நேயனின் மறைவு

சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், கலை – இலக்கிய விமர்சகர், ஜெயன் தேவா என அறியப்பட்ட ஜெயகுமரன் மகாதேவன் டிசம்பர் 21 இங்கிலாந்தில் காலமான செய்தி எட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே அவர் இறுதித் தருணத்திற்கு வந்துவிட்டார் என்ற மற்றொரு செய்தியும் என்னை எட்டியது. எங்களுடைய நண்பர் ஜேர்மனியில் வாழும் அனஸ்லி, ஜெயன் தேவா சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அண்மைய நாட்களில் அவருடைன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். இறுதியில் அவர் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டு தற்போது மரண விசாரணை முடிவடைந்துள்ளதாக அறியக் கிடைத்தது.

1961இல் பிறந்த ஜெயன் தேவா யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனாலும் யாழ் நகரப்பகுதியிலேயே வாழ்ந்தவர். யாழ் கரவெட்டி மண்வாசனை இடதுசாரிக் கொள்கை கலந்தது எனும் அளவுக்கு அங்கு அறியப்பட்ட பல இடதுசாரிச் சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். இடதுசாரிச் சிந்தனையாளர் சண்முகதாசன் பேராசிரியர் க சிவத்தம்பி இடதுசாரி செயற்பாட்டாளர் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை தோழர் எஸ் பாலச்சந்திரன், மனோ மாஸ்ரர் போன்றவர்கள் கரவெட்டியைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அறியப்பட்ட பல புள்ளிகள் கரவெட்டி மண்ணைச் சேர்ந்தவர்கள். இடதுசாரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட கிராமங்களில் கரவெட்டியும் குறிப்பிடத்தக்கது. சாதியத்துக்கு எதிராகப் போராடி பௌத்த விகாரையை நிறுவி கன்னொல்ல என்று பெயரிட்ட கிராமமும் சாதியத்துக்கு பலியானவர்களுக்கு தூபி எழுப்பிய கிராமமும் கரவெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மண்ணின் பின்னணியுடைய ஜெயன் தேவா யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரி, இவரும் இடதுசாரி கருத்தியலால் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. இளவயது முதலே சமூக அக்கறையோடு செயற்பட்டவர். எழுத்தாளர், விமர்சகர் என பன்முக ஆளுமையுடையவர். அன்றைய காலகட்டம் இணையங்கள் முகநூல்கள் ஏன் கைத்தொலைபேசிகள் என்றல்ல தொலைபேசித் தொடர்புகளே இல்லாத காலகட்டம். அன்றைய சமூக வலைத்தளம் பேனா நட்புகள். அந்த பேனா நட்பினூடாக ஐரோப்பியர் ஒருவர் ஜெயன் தேவாவுடன் நட்புக்கொண்டு ஐரோப்பாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை வந்திருந்தார். சமூக எல்லைகளைக் கடந்து சாதி, மத, இன எல்லைகளைக் கடந்து அனைவருடனும் நட்புக்கொள்ளக் கூடிய ஒருவராக ஜெயன் தோவா இருந்தார்.

அவருடைய தந்தையார் மகாதேவன் காட்டிக்கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் போராளிகளால் கொல்லப்பட்ட பல நூறு பேர்களில் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ இராணுவத்தினால் இவர் படுகொலை செய்யப்பட்டவர். எவ்வித விசாரணைகளும் இன்றி அல்லது வாந்திகளின் அடிப்படையில் தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகள், குடும்பச் சண்டைகளுக்காக காட்டிக் கொடுத்தோர் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்பட்டு உயிர்கள் மதிப்பிழந்த வரலாற்றின் சாட்சியங்கள் ஜெயன் தேவாவின் தலைமுறை. துரோகிககள், மாற்று இயக்கம், மாற்றுக் கருத்து எல்லாவற்றுக்கும் மரண தண்டனை விதித்த ஒரு போராட்டத்தின் சாட்சியங்கள்.

அவருடைய முதல் மண உறவினூடு அவருக்கு ஒரு பிள்ளையும் உண்டு. இலங்கையின் அரசியல் சூழல் காரணமாக இந்தியவுக்கு புலம்பெயர்ந்த இவர் வெளிநாட்டு ஆட்களை அனுப்பும் முகவராகவும் செயற்பட்டு இறுதியில் தொண்ணூறுக்களில் அவர் மட்டும் லண்டன் வந்தடைந்தார். இவருடைய மணஉறவு நிலைக்கவில்லை. மணமுறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுகள் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் பின் மிக நீண்ட இடைவெளியின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவு மற்றும் அதன் அரசியல் பிரிவின் தலைவியாக இருந்த தமிழினியை மணந்தார்.

ஜெயன் தேவா தமிழர் தகவல் நடுவத்துடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவத்தின் வரதரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தவர். அவரது திருமணம் பற்றி அவர் என்னோடு உரையாடிய போது தமிழர் தகவல் நடுவம் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர்களது நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. அதன் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர்பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி வரதரின் வலையத்துக்குள் வருகின்றார். அவரை விடுவித்து லண்டன் கொண்டுவர நினைத்த வரதர் தனது நம்பிக்கைக்குரிய ஜெயன் தேவாவை அணுகுகின்றார். அரசியலில் இரு துரவங்களாக இருந்தாலும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் வரதருக்கும் இடையே எப்போதும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. இவ்வாறு தான் தமிழனிக்கும் ஜெயன் தேவாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது உறவாக மலர்ந்த வேளையில் தமிழினி புற்றுநோய்க்கு உள்ளானார். அவரது இறுதிநாட்கள் எண்ணப்பட அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல தாங்கள் தீர்மானித்ததாக ஜெயன் தேவா தெரிவித்தார். அதன் பின் அவருடைய அடையாளமே தமிழினியின் கணவர் என்ற நிலைக்குச் சென்றது. இது பற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டிருந்தேன் அதற்கு அவர் தன்னுடைய அடையாளம் என்பது என்றும் தான் சார்ந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு இருந்தார். (இந்நேர்காணல் இதுவரை கானொலியாக வெளியிடப்படவில்லை. நாளை வெளிவரும்.) தமிழினி தனது கடைசிக்காலங்களில் இருந்த போது தமிழினிக்கு இருந்திருக்கக் கூடிய ஒரே ஆறுதலும் மன நிறைவும் தன்னுடை காதலன் கணவன் என்ற வகையில் ஜெயன் தேவாவின் அந்த உறவு.

தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஒரு கொலை இயந்திரமாகச் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தமிழினி. அப்புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெயன் தேவா. ‘கூர்வாளின் நிழலி;ல்” நூல் புலிகளை கடுமையாக விமர்சிப்பதாக ஒரு தரப்பு, அந்நூல் புலிகளை விமர்சிக்கவே இல்லை என மறுதரப்பு, அந்நூல் தமிழினியுடையது அல்ல என ஒரு தரப்பு, தமிழினி எழுதியதை மாற்றிவிட்டார்கள் என இன்னொரு தரப்பு, மூலப் பிரதியை கொண்டு வாருங்கள் என இன்னும் சில குரல்கள்… ஜெயன் தேவா – தமிழினி உயிருடன் இருக்கும்போது எழுப்பப்பட்ட இக்கேள்விகள் அவர்களது சுடுகட்டிலும் எழுப்பப்பட்டுக்கொண்டு தான் இருக்கும்.

ஜெயன் தேவாவிற்கும் எனக்குமான பழக்கமும் நட்பும் மிக நீண்டது. 1997 இல் லண்டனில் தேசம் சஞ்சிகை வர ஆரம்பித்த காலங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான தொடர்புகள் ஏற்பட்டத் தொடங்கியது. அன்றும் சரி இன்றும் சரி விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அரசியல் சமூக செயற்பாடுகளில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றுக் கொண்டவர்களில் ஜெயன் தேவாவும் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக தேசம் சஞ்சிகையால் நடத்தப்படும் அரசியல் சமூக கலந்துரையாடல்களில் ஜெயன் தேவா பெரும்பாலும் கலந்துகொள்வார். கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார். குறிப்பாக சினாமா தொடர்பான ஒன்றுகூடல்கள் ஜெயன் தேவா இல்லாமல் நடந்ததில்லை. சினிமா இயக்குநரும் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருமான தேவதாசனுக்கும் ஜெயன் தேவாவுக்கும் எண்பதுக்கள் முதல் நடப்பு இருந்தது. ஜெயன் தேவா கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசம்நெற் குறைந்தது ஒரு கலந்துரையாடலையாவது ஏற்பாடு செய்திருந்தது. பிற்காலத்தில் தேவதாசனை விடுவிக்க ஜெயன் தேவா சில முயற்சிகளையும் எடுத்திருந்தார். அது பலனளிக்கவில்லை.

தேசம் சஞ்சிகையிலும் தேசம் இணையத் தளமாக வந்த போது தேசம்நெற் இலும் ஜெயன்தேவா கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் லண்டன் உதயன் லண்டன் குரல் பத்திரிகைகளை வெளிக்கொணர்ந்த போது தகவல்களை வழங்குபவர்களில் தகவல்களைச் சரி பார்ப்பதில் ஜெயன் தேவாவும் ஒருவர். பிற்காலத்தில் அவர் தாமிரம் என்கிற புளொக் சைற்றை உருவாக்கி சில பதிவுகளை இட்டுள்ளார். முகநூலூடாக அரசியல் கருத்துநிலையை தொடர்ந்தும் மரணத் தருவாயிலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இவருடைய ஆக்கங்கள் பதிவு, காலச்சுவடு மற்றும் இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளது.

2016 இல் இலங்கையில் என்னுடைய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாயக்கால் வரை’ என்ற 2009 யுத்தம் பற்றிய நூல் வெளியிட்ட போது ஜெயன் தேவா நூல் பற்றிய அறிமுகவுரையை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது எழுத்தாளர் கருணாகரன் வீட்டில் தமிழக எழுத்தாளர் ஒருவரும் சந்தித்து உரையாடியது தான் கடைசியாக நாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டது.

அதன் பின்னும் ஜெயன் தேவாவின் நட்பு தொடர்ந்தது. முல்லைத்தீவில் முன்னாள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் தாய் தந்தையற்ற போராளிகளின் குழந்தைகளைப் பராமரிக்கின்றார் என்றும் அவருக்கு உதவும் படியும் கோரி இணைப்பை ஏற்படுத்தித் தந்தார். இன்று வரை கற்சிலைமடுவின் குழந்தைகளை லிற்றில் எய்ட் ஊடாக பலருடைய உதவிகளையும் பெற்று முடிந்தவரை உதவிகளை வழங்கி அவர்களை கல்விநிலையில் முன்னேற்றி வருகின்றோம். இவ்வாறு ஜெயன் தேவா புகைப்படக் கலைஞர் சுகுன சபேசன் ஊடாக சில உதவிகளை வழங்கி இருந்தார். ஜேர்மனியில் அனஸ்லி ஊடாக சில உதவி நடவடிக்கைகளைச் செய்வித்தார்.

தற்போது உதவி என்பது நாங்கள் எங்கள் பணத்தைக்கொண்டு தான் செய்ய வேண்டும் என்பதல்ல. உதவி தேவப்படுபவரையும் அதனைப் பூர்த்தி செய்யக்கூடியவரையும் இணைத்துவிடுகின்ற ஜெயன் தேவா போன்ற பாலங்களின் தேவை இப்போதும் உள்ளது. மக்களை இணைத்துவிடுவதும் மிகப்பெரும் சேவையே.

ஜெயரூபன் மைக் பிலிப் என்பவர் டிசம்பர் 22இல் எழுதிய இரங்கல் குறிப்புக்கு எழுத்தாளர் விரிவுரையாளர் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி எழுதிய குறிப்பு என்னை மிகவும் சினங்கொள்ள வைத்தது. ஜெயன் தேவ காலமாகி சில மணி நேரங்களுக்குள் இப்பதிவு இடப்பட்டிருந்தது. ஜெயன் தேவா ஒன்றும் தேவனுமல்ல தேவ துதனுமல்ல. எங்கள் எல்லோரையும் போல சாதாரணன். நாங்கள் ஒன்றும் கருத்தியல் பிசகாது, ஒழுக்கநெறி பிறழாது வாழும் உத்தமர்கள் கிடையாது. எம் எல்லோர் வாழ்விலும் களங்கங்கள், வடுக்கள் உள்ளது. அதற்காக எங்கள் மரணங்கள் எங்களை தவறுகளில் இருந்து விடுவிப்பதில்லை. மரணத்தின் பின்னும் காத்திரமான விமர்சனங்களில் தவறில்லை. மரணங்கள் மனிதர்களை புனிதப்படுத்துவதில்லை என நம்புபவன் நான். ஆனால் அந்த விமர்சனங்களை மொட்டைப் பதிவுகளாக்கி அதற்கு லைக் போடும் மனநிலை மிக மோசமானது.

ஒரு மனிதனை அவன் மறைவுக்குப் பின் மதிப்பிடுவதானால் அவனை அரசியல் ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள். ஒற்றை வார்த்தையில் ‘தோழரல்ல, பொய்மான், போலிகள்’ என்ற அடைமொழிகள் உங்கள் ‘துரோகி’ அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடே. சேரன் ருத்திரமூர்த்தியின் பதிவு படத்தில். “முன்னொரு காலத்தில் கொஞ்சம் விடுதலை வேட்கை இருந்தமையால் துயரில் பங்கெடுக்கிறேன்” என விடுதலை வேட்கையை மொத்த குத்தகைக்கு எடுத்த சேரன் ருத்திரமூரத்தி தனது அனுதாபத்தை சில்லறையாக விட்டெறிகிறாரம். ‘தோழரல்ல. போலி. பொய்மான்’ என்று கதையளக்கும் சேரனின் மரணம் நிகழும்போது அந்த நினைவுக் குறிப்பில் “கதிரைக்கு சட்டை போட்டுவிட்டாலும் புனரும் தோழா!” என்ற குறிப்பை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால் அதற்கும் லைக் போட மார்க் சுக்கம்பேர்க் ஆட்களை உருவாக்கி இருக்கிறார். முகநூலினதும் சமூகவலைத்தளங்களினதும் வெற்றி அதுதான். நீங்கள் யாராக இருந்தாலும் கடைநிலைப் பொறுக்கியாக இருந்தாலென்ன பேராசிரியராக இருந்தாலென்ன உங்கள் உணர்வுகளைத் தூண்டி அதனை கிலுகிலுப்பூட்டி சமூக வலைத்தளத்தில் வாந்தியெடுக்க வைப்பது. நீங்கள் அதற்கு லைக் போடுகிறீர்களோ தம்ஸ் டவுன் போடுகிறீர்களோ மார்க் சுக்கம்பேக்கின் பாங்க் எக்கவுன்ட் மட்டும் எப்போதும் அப்பீற்றில் இருக்கும்.

ஜெயன் மகாதேவா தன்னுடைய உயிர் போகப்போகின்றது என்று தெரிந்த நிலையில் டிசம்பர் எழில் தனது முகநூலில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “I am too afraid to be ill because most of the doctors and nurses are too demoralised..” என்று தெரிவித்திருந்தார். பிரித்தானிய சுகாதார சேவைகளின் நிலையையும் அதற்கு பிரித்தானிய அரசு கவனம் கொள்ளாத நிலையையும் ஒற்றை வசனத்திற்குள் அடக்கிய மிகப்பெரும் அரசியல் கட்டுரை இது. பிரித்தானியாவில் றோயல் கொலிஜ் ஒப் நேர்சிங் இன் 160 வருட வரலாற்றில் முதற்தடவையாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் சுகாதார சேவைகளில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை 133,400 வெற்றிடங்கள். அரசு பணியாளர்கள் சங்கத்தோடு பேச்சுவாரத்தைக்கு வர மறுக்கின்றது. இங்கிலாந்தின் சுகாதார சேவைகள் ஈடாடி உடைந்துவிடும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயன் தேவா மட்டுமல்ல இவ்வாறான நூற்றுக்கணக்கான தடுக்கக் கூடிய தாமதப் படுத்தக்கூடிய மரணங்கள் விரைந்து துரிதகெதியில் நிகழும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஜெயன் தேவாவின் இந்த அரசியல் குறிப்புக்கும் பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தியின் மொட்டைக் குதர்க்கத்திற்கு உள்ள இடைவெளி தான் இன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் உணர்வுநிலைப்பட்ட இடைவெளி.

பலவேறு முரண்பாடுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால் ஜெயன் தேவா நல்லதொரு நண்பர். மனித நேயன். சிறந்த எழுத்தாளர். விமர்சகர். அவருடைய இழப்பு எங்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவருடைய உறவுகள் நட்புகள் அனைவருடனும் என் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *