“தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவை அழைக்க நேரிடும்.” என தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.
ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.
எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.
இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.
ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.