நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் ($42) உதவித்தொகை வீதம் வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) முன்வந்துள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவாக பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 04 பில்லியன் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கமநல மக்கள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் கீழ், 1 ஹெக்டேர் வரை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாயும், 2 ஹெக்டேர் வரை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 20,000 ரூபாவும் வழங்கப்படும்.
விவசாயிகளிடமிருந்து இந்தப் பணம் மீள அறவிடப்பட மாட்டாது என்றும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் நாட்டின் விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கூறுகிறார்.