“பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” – நளின் பண்டார

“பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அரசாங்கத்தின் ஆட்சியாகும்.

எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில், மக்கள் விரும்பும் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

எனவே இவ்வாண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு டொலர்கள் தேவையில்லை.

இலங்கை ரூபாவிலேயே தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக நிதி இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமின்றி, அரசாங்கம் முயற்சித்தால் மாகாணசபைத் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும். ஜனாதிபதி விரும்பினால் விரைவில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் மாத்திரமே நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தற்போது மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது. சட்டத்தின்படி மின் கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அப்பாற்பட்டவரைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் குறிப்பிடுவதைப் போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும். இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக்கத்தை செலுத்தும்.

மாறாக எதிர்ப்புக்களை மீறி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலைமையைப் போன்று, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் மோசமானதொரு நிலைமை ஏற்படக் கூடும். மீண்டுமொரு கிளர்ச்சி போராட்டத்தை நடத்துவதற்கு மக்கள் அஞ்சமாட்டார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *