உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தமிழ்தேசிய கட்சிகள் இன்னமும் ஒரு உறுதியான முடிவுக்கு வராத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எனினும் தமது கட்சி இணைவது தொடர்பில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சிக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அணியாக போட்டியிடுமெனவும், ஏனைய தமிழ் தேசிய கட்சிகளும் தேர்தல் கூட்டணி தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.