இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்பி,
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.
சகல தரப்புகளும் இணங்கும் சிறந்த தீர்வை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கான முயற்சியை ஜனாதிபதி ரணில் உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எனினும் அது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்டதாக காணப்படுகின்றன.
அந்த வகையில் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினை தீர்வுக்கான சாத்தியப்பாட்டையும் குழப்ப முயற்சிக்கும் விடயமாக இதை உணர முடிகிறது. அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும்; அதில் முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தார்.