“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பு அவ்வளவு நல்லதாக இல்லை. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் முன்னேற்றம் எதுவும் இன்று வரை இல்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள். நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன்.
அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும் ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.
இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நானும் (எம்.ஏ. சுமந்திரன் – தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதனும் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தனும் (புளொட்) கலந்துகொண்டோம்.
அதேவேளை, அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்றனர் . வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை” – என்றார்.