நாட்டுக்கு திருப்பியனுப்புங்கள் – கனடா செல்ல முற்பட்டு கர்நாடகாவில் உள்ள இலங்கையர்கள் போராட்டம்!

இந்தியா கர்நாடகாவில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டிற்கு செல்வதற்காக முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 38 பேரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2021.06.10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களூரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம், மீண்டும்  அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாது பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முகவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, தாம் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *