“சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவர ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள். இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும். அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது. அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல. மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம். ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *