“தமிழ் தேசியத்தை சிதைக்க கூட்டமைப்பிற்குள் நுழைந்த விசமிகள் சம்பந்தனை கொண்டே அதனை நிறைவேற்றினர்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில்;
இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவியும் பறிபோய், நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இரா. சம்பந்தன் நிற்பதைக் காண மனம் சகிக்கவில்லை எனவும் K.V.தவராசா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எந்த முகத்துடன் சென்று ரணிலுடன் பேச்சு நடத்த முடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.