சுமார் ஆறு வருடங்களில் முதன் முறையாக 2022 இல் இலங்கையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க அறிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, மோசமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துடனும் போராடி வருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 42.9 சதவீதமானோர் ஏதாவது ஒரு வகையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய அல்லது நிறை குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துள்ளன.
ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1.4 மில்லியன் குழந்தைகள் நாட்டின் குடும்பநல சுகாதார அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2021இல் 12.2சதவீதமாக இருந்த எடைக்குறைந்த குழந்தைகளின் வீதம் 2022 இல் 15.3 வீதமாக உயர்ந்துள்ளது.
வளர்ச்சிக்குன்றிய குழந்தைகளின் வீதம் 2021இல் 9.2ஆக இருந்த நிலையில் 2022இல் அது, 10.1 வீதமாக உயர்ந்திருந்தது
நாட்டின் இந்த தீவிரப்போக்கு நகர்ப்புறம், கிராமம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.