பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்த போதும் ஜீவன் தொண்டமான் அமைச்சுப் பதவியை வகித்திருந்தார். குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தை பெற்றுத் தருவதாக குறித்த பாராளுமன்ற தேர்தலில் ஜீவன் தொண்டமான் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இன்று வரை அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளுக்கான எந்த தீர்வையும் ஜீவன் தொண்டமானாலும் – அவர் சார்ந்திருந்த அரசாங்கங்களாலும் வழங்க முடியவில்லை.
இதே நேரம்நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.