யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபைக்கு முதல்வர் தெரிவாகியுள்ளதாக ஊடகங்களிலும் வர்த்தமானி பிரசுரத்திலும் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் ஆரம்பம் தொட்டு சட்டவிரோதமாக செயற்பட்ட விடயமாகவே கருதுகின்றேன். இது திட்டமிட்ட நோக்கத்துடன் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும் என்கின்ற தேவைப்பாட்டின் அடிப்படையில் மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற்றிருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் சட்ட விதிமுறைகளை மீறி சட்டவிரேதமாக அறிவிப்பு வெளியாகியது பின்னர் ஒரு தேர்தல் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் சுற்று நிரூபம் ஒன்றில் இரண்டு முறைகள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்லமுடியாது. பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று சுற்று நிரூபம் இருக்கின்றது. அந்த சுற்று நிரூபத்தை மீறி யாழ் மாநகர சபையின் முதல்வராக இம்மானுவேல் ஆனோல்ட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் நிறைவெண் காணாது என உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை ஒத்திவைத்து வெளியேறிய பின்னர் இப்பொழுது மோசடியாக சட்டவிரோதமாக ஒருவர் யாழ்.மாநகர சபையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலே பெருமளவு இலஞ்ச ஊழல் இடம்பெற்றிருக்கின்றதோ..? என எண்ணத்தோன்றுகின்றது.
எனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதில் இருந்து அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் – இந்த சட்டவிரோத செயற்பாடுகள் நடக்கலாம் என்றால் யாழ்ப்பாணத்திலே சட்டங்கள் தேவையில்லை. சட்டப்புத்தகங்களை குப்பையிலே எறிந்து விட்டு இந்த முதல்வர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதிலிருந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றோம்.
கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சி மன்ற வேட்பு மனு தயாரிக்கும் வேலைப்பளுவினால் இயங்கிக் கொண்டிருந்தமையினால், சில வழக்குகளை தாக்கல் செய்யமுடியாத நிலை இருந்தது. தற்போது இந்த வேலைப்பளுக்கள் குறைவடைந்துள்ளது உடனடியாக நீதி மன்றத்தை நாடி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.