முஸ்லிம்களது கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் காலத்திலிருந்து தற்போது வரை அரசாங்கம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறதென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பு நவரோதய மண்டபத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் என். எம். அமீன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள (23) முஸ்லிம் பாடசாலைகள் பிரச்சினைகள் பற்றி இங்கு உரையாற்றினார். ஆனால் அவர் தமிழ் மொழி மூலம் உள்ள றோயல், டி. எஸ்., இசிப்பத்தன போன்ற பாடசாலைகளது கல்வி வளர்ச்சியைப் பற்றி இங்கு பேசவில்லை.
மட்டக்குளியில் உள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலையில் கடந்த ஆண்டு க. பொ. த. (சா.த.) பரீட்சை எடுத்த எந்தவொரு மாணவரும் க. பொ. த. (உ.த.) கற்பதற்கு தகுதி பெறவில்லை. கொழும்பு மத்தியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல பாடசாலைகளது கல்வி முன்னேற்றம் இந்த நிலையில்தான் உள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு மெளலவி ஆசிரியர் பரீட்சை நடத்தியுள்ளோம். அந்நியமனமும் மிக விரைவில் வழங்கப்படும்.
காலஞ்சென்ற கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் முயற்சியில்தான் முஸ்லிம் பெண்களுக்காக அளுத்கம கல்விக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. கண்டியில் தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாத்தளை ஸாஹிராவுக்கு 40 பேர்ச் காணி எடுத்துக் கொடுத்துள்ளோம்.