வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த காணி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இராணுவம் நிலைக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மக்கள் நீண்டகாலம் போராடியும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனடிப்படையில் குறித்த காணிகளில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தினரையும் முகாம்களையும் அங்கிருந்து வேறு இடங்களுக்கு நகர்த்தி அந்த காணிகளை உரிய மக்களிடம் வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுபாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியை உரிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த காணி விடுவிப்பு இடம்பெறுவதுடன், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு தரப்புகளின் பயன்பாட்டில் மேலும் மக்கள் காணிகள் இருப்பின் அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.