2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் மோசடிகள் அதிகரிப்பு – ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

ஊழல் குறிகாட்டி சுட்டெணின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் மோசடிகள் அதிகளவில் பதிவாகியிருப்பதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழல் குறிகாட்டி சுட்டெண் உலகளாவிய ரீதியில் ஊழல் நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சுட்டெணாகக் காணப்படுகின்றது. இம்மதிப்பீட்டில் உலகளாவிய ரீதியிலுள்ள 180 நாடுகள் உள்வாங்கப்படும்.

அந்தவகையில் ‘இலங்கையைப் பொறுத்தமட்டில் கொவிட் – 19 வைரஸ் பரவலின் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சியுடன் இணைந்ததாக சீரற்ற முகாமைத்துவம் மற்றும் ஊழல் என்பவற்றின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்தது’ என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி நாட்டில் நெருக்கடி இன்னமும் தீர்வின்றி தொடரும் நிலையில், இலங்கை மக்களுக்கு அவசியமான முறையான சட்டக்கட்டமைப்பு, தரமான ஆட்சிநிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டுமென சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 2022 ஆம் ஆண்டில் ஊழல் குறிகாட்டி சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் 100 க்கு 36 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இலங்கை, கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு புள்ளியால் பின்னடைவைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *