“75 ஆவது சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள்.” – ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய சி.வி. விக்கி!

“நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.”  என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே இதனை அவர்கள் பார்க்கின்றார்கள்.

மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

பெப்ரவரி 4ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தினுள் இருந்து பெரும்பான்மையின ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று சென்றமையை சுட்டிக்காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.

ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்.

தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.

அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி நான்காம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம்” – என்றார்.

இதேநேரம் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ராஜபக்சர்களால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தபட்டார். எதிர்க்கட்சி உட்பட பல சிங்கள தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை எதிர்த்தனர். குறிப்பாக மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றத்திற்கு கூட நேரடியாக தெரிவு செய்யப்படாத ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டி இருந்தது. இப்படியான நிலையில் சில பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் சி.வி. விக்னேஸ்வரன் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தன்னுடைய முழுமையான ஆதரவையும் வழங்கியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சனைக்கு இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு முழுமையான தீர்வு தருவதாக கூறி வந்த நிலையில் இதுவரையிலும் எந்த தீர்வும் அவரால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிப்பதாக சிவி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *