துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
7.8 ரிச்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 5000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக பல கட்டடங்கள் சரிந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.
குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
நிலநடுக்க அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.
1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்குவியலாக காட்சி அளிக்கிறது.
மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் வைத்தியசாலைகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதிகள் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்தன.
அங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நகரங்கள் சின்னாபின்னமாகின. குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள ஜாண்டரிஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே உள்நாட்டு போரின் போது நடந்த குண்டுவெடிப்புகளால் இடிந்த கட்டிடங்கள் உள்பட நூற்றுக்கணக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
அதேபோல் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும், மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன.
பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.