தனது மனைவியுடன் தகாத தொடர்புகளை பேணியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை 16 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று மரண தண்டனை விதித்தார்.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியதாக தீர்மானித்த நீதிபதி, அசிக்க மதுக என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சதுன் பிரசாத் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உள்ளூராட்சி நிறுவனமொன்றில் பணியாற்றியதாகக் கூறப்படும் பிரதிவாதி, தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய போது மனைவி வீட்டில் இல்லாமையால் அவரை தேடிச் சென்றுள்ளார்.
இதன்போது, வாடகை முச்சக்கரவண்டியில் தனது மனைவி மற்றுமொருவருடன் சென்றதைக் கண்டு, அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பின்னர் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் வீதியிலிருந்து மீட்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.