தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தற்போது அமுலில் இல்லை. அதனை புதுப்பிப்பதற்கு தொழிற்சங்கங்கள் முற்பட்டாலும், பெருந்தோட்டக் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், சம்பள நிர்ணய சபையின் தலையீட்டுடனேயே தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, தற்போதைய வாழ்க்கை சுமை அதிகரிப்புக்கமைய, சம்பள உயர்வுக்கான பரிந்துரையை முன்வைக்கும் அதிகாரம் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளது. என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சக்கள் தரப்புடன் கூட்டணி அமைத்த போதும் இ.தொ.க குறிப்பாக ஜீவன் தொண்டமான் 1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டு மக்களின் வாக்குகளை பெற்ற போதும் மூன்று வருடங்களாகியும் அதனை நிறைவேற்ற முடியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மீண்டும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.