“ஆங்கிலத்தை அரச கரும மொழியாக மாற்றுவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு.”- இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே

“நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.” என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது. 13 அல்லது 13 பிளஸ் என்ற பிரச்சினைகள் எமது நாட்டுக்கு வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்களாக வாழ வேண்டும்.

விக்னேஸ்வரன் சண்டித்தன  கதைகளை கைவிட வேண்டும். விமல் வீரவன்ச போன்றோர் இனவாதத்தை தூண்டுவதனை நிறுத்த வேண்டும். சண்டித்தனமான பேச்சுக்களினாலும், இனவாத செயற்பாடுகளினாலும் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது.

அதன் தாக்கமே இன்று பொருளாதார பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பொருளாதார தாக்கம் அனைத்து இன மகக்ளையும் ஆட்டிப்படைக்கிறது. வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இலங்கையில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே வழி அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவிப்பதே. அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது. எனவே இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கில மொழியை அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும். நாடும் அனைத்து வழிகளிலும் முன்னேறும்.எவரும் மொழியுரிமை என குறிப்பிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள்.

அதேவேளை தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்பதால் அவர் அரசாங்கத்தை ஏற்கவில்லை.

நெருக்கடியான சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பவரே உண்மையான தலைவர், சந்தர்ப்பாதிகள் உண்மையான தலைவர் அல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *